ஒரே பாட்டில் கோடீஸ்வரனாகும் ஹீரோக்களுக்கு மத்தியில் உழைத்து முன்னுக்கு வரும் ஒரு சாமானியனை ஹீரோவாகக் காட்டும் கதை.
கதையின் நாயகன் என்று யதார்த்தமாக அறிமுகப்படுத்திக்கொண்டு திண்டுக்கல் சாரதியில் மையப் பாத்திரத்தை ஏற்ற கருணாஸ் அதே பாதையில் பயணிக்கும் படம். முதல் படத்தின் வெற்றி அடுத்த படத்தில் தடுமாறவைப்பது கோலிவுட்டில் சகஜம். ஆனால் அம்பானியாக ஆசைப்படும் தண்டபாணி பேப்பர் போடுவதுபோல கதாநாயகானாகிவிட்டாலும் கருணாஸ் மண்ணில் காலூன்றி நிற்கிறார். சண்டை போடவும் சாகசங்கள் செய்யவும் பஞ்ச் வசனம் பேசவும் சந்தர்ப்பங்கள் கிடைத்தும் ஏற்ற பாத்திரத்தின் இலக்கணங்களுக்குட்பட்டு அடக்கியே வாசிக்கும் யதார்த்தத்துக்குப் பாராட்டுக்கள்.
பளபளப்பான ஒரு அலுவலகம். சுற்றிலும் அதி நவீன சாதனங்கள். ஒரு சுழல் நாற்காலி சுற்றுகிறது. அதிலிருந்து வசந்த் அண்ட் கோ முதலாளி ஸ்டைலில் ஒருவர் மக்களைப் பார்த்துச் சிரித்துக் கும்பிடு போடுகிறார். உண்மை, உழைப்பு, உயர்வு – தண்டபாணி அண்ட் கோ என்கிறார்.
இதுதான் அனாதையாகச் சென்னைக்கு வந்த அம்பாசமுத்திரம் தண்டபாணியின் (கருணாஸ்) அம்பானிக் கனவு. இதற்காக அவன் கடுமையாக உழைக்கிறான். சித்தர் ஒருவரின் அறிவுறைப்படி அமாவாசையன்று நடு இரவில் எழுந்து ஒற்றைக்காலில் நின்று அம்பானியாகணும் நமஹ என்று ஊரே எழுந்துகொள்ளும் அளவுக்கு உரக்க ஜபிக்கிறான். பேப்பர் போடும் ஏஜன்ஸி நடத்திப் படு சிக்கனமாக இருந்து பணம் சேமிக்கிறான். கணபதி பூஜை நடத்த அய்யர் வரவில்லை என்றால் அவனே மந்திரம் சொல்லிப் பூஜையை முடிப்பான்.
தனக்கு காட்ஃபாத்ர் போல இருக்கும் அண்ணாச்சி (கோட்டா ஸ்ரீநிவாச ராவ்) கட்டும் வணிக வளாகத்தில் தானும் கடை வைக்க ஆசைப்படுகிறான். கொஞ்சம் கொஞ்சமாக (உண்மையில் லட்ச லட்சமாக) அவரிடம் பணத்தைக் கொடுத்துவைக்கிறான்.
இதற்கிடையில் இவனை வலிய வந்து காதலிக்கிறாள் பக்கத்து வீட்டுப் பெண் (நவனீத் கவுர்). லட்சியத்திலிருந்து திசை மாற விரும்பாத தண்டபாணி வீட்டைக் காலிசெய்துகொண்டு போய்விடுகிறான். சீக்கிரம் பணம் கொடுத்து இட்த்தைப் பதிவுசெய்வதற்கான நிர்ப்பந்தம் கூடிக்கொண்டே போகிறது.
காதல் என்ன ஆனது என்பதற்கு சீக்கிரமே விடை சொல்லும் திரைக்கதை, தண்டபாணியால் முழுப் பணமும் கொடுத்துப் பெரிய கடைக்குச் சொந்தக்காரனாக முடிந்ததா எனப்தை கிளைமாக்சில் சொல்கிறது. அதுவரை, காமெடி, கிளுகிளுப்பு, செண்டிமெண்ட், துரோகம், பரிதாபம் என்று பல நிறங்களுடன் காட்சிகள் நகருகின்றன.
தினமும் காலையில் பத்து பேருக்கு டீ வாங்கி கொடுப்பது, அம்பானியாவதற்கான அதிகாலைத் தவம், பணத்துக்காகச் சாக்கடையில்கூடக் குதிப்பது, லிவிங்ஸ்டனின் ஒருதலைக் காதல், ஃபிளாஷ்பேக்கில் வரும் வெள்ள நிவாரணச் சாவு, அடைக்கலமாக வந்த கூட்டாளியின் துரோகம் ஆகிய சம்பவங்களினூடே கதையை நகர்த்திச் செல்கிறார் ராம்நாத். பாசிட்டிவாகத்தான் படம் முடியும் என்று தெரிந்துவிடுவதால் திரைக்கதையின் சுற்றுப்பாதை ஆயாசமூட்டுகிறது. “ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளி” என்று வர்ணிக்கப்படும் நவ்நீத்துக்கு தண்டபாணி மீது காதல் வருவதற்கான காரணம் பலவீனமாகக்கூடச் சொல்லப்படவில்லை. நாயகியின் பெற்றோர் மரணம், கிளைமாக்சுக்கு முன் அண்ணாச்சி மரணம், இடையில் ஒரு துரோகம் என்று சம்பந்தமில்லாத திருப்பங்கள் திரைக்கதையைப் பல்வீனப்படுத்துகின்றன.
கலகலப்பாகச் செல்லும் முதல் பாதியிலிருந்து கொஞ்சம் விலகி இரண்டாவது பாதி சீரியஸாகிறது. ஆனால் பேப்பர் ஏஜன்ஸி, குல்ஃபி ஐஸ் விற்பனை முதலானவற்றின் மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் சம்பாதிக்கும் மாயாஜாலம் படத்தின் மிகப் பெரிய உறுத்தல்.
மயில்சாமி, டெல்லி கணேஷ், ஹனீஃபா, லிவிங்ஸ்டன் ஆகியோரது பாத்திரங்கள் கலகலப்பூட்டுகின்றன. தண்டபாணியின் பாத்திரம் சீராக உருவாக்கப்பட்டுள்ளது. வசனங்கள் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.
நேர்மை, அப்பாவித்தனம், லட்சியத்தில் உறுதி ஆகியவற்றை நன்றாகவே வெளிப்படுத்துகிறார் கருணாஸ். அலட்டிக்கொள்ளாத அவர் உடல் மொழி கைகொடுக்கிறது. ஆனால் முக பாவங்களில் இன்னும் வெரைட்டி
தேவை. நவ்நீத் கவுர் பாடல் காட்சிகளில் மட்டுமின்றி அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டுப் புடவையைக் கழற்றி தரிசனம் தருகிறார். ஆனால் வெறும் கவர்ச்சிக்கு மட்டும் இவரைப் பயன்படுத்தாமல் கதையோடு சேர்த்துப் பயணிக்கும் பாத்திரமாக ஆக்கியிருக்கிறார் இயக்குநர்.
இசை கருணாஸ். வெவ்வேறு வகைமைகளில் அமைக்கப்பட்டிருக்கும் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசையும் பரவாயில்லை.
பாசிட்டிவ்வான மெசேஜ் கொடுக்க முயன்றதற்காகவும் அதை ஓரளவு இயல்பான சம்பவங்கள் மூலம் சொல்ல முயற்சித்ததற்காகவும் ராம்நாத்தைப் பாராட்டலாம். ஆனால் சம்பவங்களை யோசிப்பதிலும் விறுவிறுப்பைக் கூட்டுவதிலும் இன்னும் மெனக்கெட்டிருந்தால் இந்த அம்பானிக்கு முழு வெற்றி கிடைத்திருக்கும்.
RSS Feed
Twitter
6:52 AM
thupparithal

0 comments:
Post a Comment