Adsense

Tuesday, July 13, 2010

மதராசப்பட்டினம் நிறை குறைகளை எனது பார்வையில் ஓர் அலசல்...

வாழ்வின் அந்திம காலத்தில் இருக்கும் மூதாட்டி அவர். கணவரின் மரணத்தை அடுத்து நோய்வாய்ப்படுகிறார். இன்னும் ஒரு வாரத்தில் பெரிய அறுவை சிகிச்சை செய்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் அவர் கண்ணில் தட்டுப்படுகிறது ஒரு பொருள். 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாத்துவைத்திருக்கும் ஒரு பொருள் அது. அதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. அதன் விதை சென்னையில் இருக்கிறது. அப்பொருளை உரியவர்களிடம் சேர்க்க இந்தியாவில் சென்னைக்கு வர வேண்டும். உறவினர்களின் ஆலோசனையைக் கேட்காமல் தன் பேத்தியுடன் பிடிவாதமாகப் புறப்பட்டு இந்தியா வருகிறார் அந்த மூதாட்டி.
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் 63 ஆண்டுகௌக்கு முன்பு நடந்த சம்பவங்களை அசைபோட்டபடி மூதாட்டியின் தேடல் தொடங்குகிறது. வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட அந்தக் கடைசி ஆண்டுகளில் சென்னையில் நடைபெற்ற கதை, பாட்டியம்மாவின் நினைவில் விரிகிறது. பொருளுக்கு உரியவர்களைக் கண்டறிவதற்கான தேடலும் பழைய நினைவுகளும் மாறி மாறி ஊடாடும் திரைக்கதையில் விரிகிறது டைட்டானிக்கை ஒத்த ஒரு காதல் கதை.
வெள்ளைக்கார கவர்னரின் மகளுக்குச் சென்னையில் துணி வெளுக்கும் வீர இளைஞன் ஒருவன் மீது காதல் ஏற்படுகிறது. கண்டதும் காதல் ரகமல்ல இது. மெல்ல மெல்ல உருப்பெறும் உணர்வு. ஆங்கிலேய போலீஸ் அதிகாரி ஒருவனுக்கு அவளது விருப்பத்தைக் கேட்காமலேயே நடத்தப்பட்ட நிச்சயதார்த்தத்தை மீறி வளரும் காதல். துணி வெளுப்பவர்களைத் துரத்திவிட்டு அந்த இடத்தில் கோல்ஃப் மைதானம் கட்டும் ஆங்கில நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் அணி திரள்கிறார்கள் (இப்போதும் வேறு வடிவங்களில் நடக்கும் கதைதானே இது!).
போராட்டமும், காதலும், காதலுக்கு எதிரான அதிகார அடக்குமுறைகளுமாக நகர்கிறது படம். இணை கோடாக, பாட்டியம்மாவின் தேடல் தொடர்கிறது. காதலர்கள் ஒன்றிணைந்தார்களா, பாட்டியம்மா சென்னைக்கு வந்த நோக்கம் நிறைவேறியதா என்பதே க்ளைமாக்ஸ்.
முதலில் சபாஷ் போட்டு குறிப்பிடப்பட வேண்டியது, அன்றைய சென்னையின் மறு உருவாக்கம். அழகாகவும் அமைதியாகவும் இருந்த 1940களின் சென்னைக்குத் திரையில் உயிர் கொடுத்திருக்கிறார்கள் கலை இயக்குநர் செல்வ குமாரும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும். டிராம் வண்டி, சென்ட்ரல் எதிரில் ஓடிய சுத்தமான நதி, தள்ளு வண்டி, அந்தக் காலக் கட்டிடங்கள் என்று எல்லாமே ஒரு கனவு போல் இருக்கிறது. நாற்பதுகளில் சென்னையில் வாழ்ந்தவர்களை இன்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வைத்துப் பார்க்கும்போது மதராசப்பட்டினக் குழுவின் நேர்மையான உழைப்பு நமக்குப் புரியாமல் போகாது.
அன்றைய சென்னையை மறு உருவக்கம் செய்ததோடு மட்டுமின்றி, அதை ஒரு பார்வையோடு முன்வைத்துள்ள இயக்குநரின் அணுகுமுறை பாராட்ட வேண்டிய ஒன்று. அன்றைய நாட்களில் மக்கள் படகு சவாரி செய்த நதி இன்று நாற்றமெடுக்கும் சாக்கடையாக மாறியுள்ள அவலத்தைக் காட்சிப்படுத்தியுள்ள விதம் அற்புதம். பல காட்சிகள் தாமாகவே பேசுவது இயக்குநரின் காட்சிப்படுத்தும் திறனுக்குச் சான்று. இரண்டே இரண்டு பெயர்களை வைத்துக்கொண்டு இன்றைய சென்னையின் ஜனக் கடலில் தேடும் காதலின் தவிப்பைச் சொன்ன விதமும் அழகு.
பாட்டியம்மாவின் நிகழ்காலத் தேடலில், இன்றைய சென்னையின் வாழ்க்கை முறையில் பிரிக்க முடியாமல் படிந்திருக்கும் வணிக நோக்கை இயக்குநர் நன்றாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார். டிராவல் ஏஜன்ஸியின் பேராசையும் பழைய புகைப்படங்களை வைத்திருப்பவர் அவற்றை அணுகும் விதமும் இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.
கதை என்று பார்த்தால் வெகுஜன சினிமாவின் ஃபார்முலாவில் ஊறிய கதைதான். மேல் தட்டுப் பெண்ணொருத்தி கீழ் மட்டத்தில் இருப்பவனைக் காதலித்தால் ஏற்படும் சிக்கல்களை இந்தியத் திரைகளில் பல விதங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தின் காதல் கதையோ அதைச் சொல்வதற்கான சம்பவங்களோ அதே பாதையில்தான் பயணிக்கின்றன. ஒரு பெண்ணுக்காக இரண்டு ஆண்கள் மோதிக்கொள்வது முதல் பல காட்சிகள் பல படங்களில் நாம் பார்த்தவைதான். ஆனால் சில்லறைத்தனங்கள் இல்லாமலும் விறுவிறுப்பாகவும் கொண்டு சென்றிருப்பதில் இயக்குநருக்கு வெற்றி கிடைக்கிறது. கூடவே படம் முழுவதும் இழையோடும் நகைச்சுவை உணர்வு படத்திற்குப் பெரிய பலம்.
இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு முதல் பாதியில் இல்லை. முதலில் வரும் பாடலும் இடைவேளைக்கு முன்பு குறைந்த இடைவேளையில் வரும் இரு பாடல்களும் படத்தின் ஓட்டத்தைக் குறைக்கின்றன. தங்களுக்கு உதவிய வெள்ளைக்காரப் பெண்ணுக்கு நன்றி சொல்லப் போகும் காட்சி கொஞ்சம் ஓவராகப் போவதால் கலகலப்புக்குப் பதில் சலிப்பே ஏற்படுகிறது. சுதந்திரம் பெற்ற அன்று நள்ளிரவில் நடக்கும் சம்பவங்கள் பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. கிளைமாக்ஸை ஒட்டிய காட்சிகள் மனதைத் தொடுகின்றன.
கதாநாயகி எமி ஜாக்சன், நடிப்பாலும் அழகாலும் அப்படியே திரையை நிறைக்கிறார். அதிகார வெறி கொண்ட ஆங்கிலேயர்களுக்கு மத்தியில் மனிதத் தன்மை கொண்ட பாத்திரத்தில் எமி ஒரு தேவதைதான். புதிய தேசத்தைக் காணும் போது வியப்பு, காதல், கோபம், பரிதவிப்பு, ஆவேசம் என்று அனைத்தும் இவரது அழகிய முகத்தில் துல்லியமாகத் தோற்றம் கொள்கின்றன. மொழிப் பிரச்சினையை அனாயாசமாக ஈடுகட்டிவிடுகிறது இவரது விழிகள் பேசும் மொழி. காதலைக் கவிதையாக்குகிறது எமியின் நடிப்பு.
துணி வெளுக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த ஆர்யாவின், புதிய முயற்சி படங்களின் வரிசையில் அவருக்கு மதராச பட்டினமும் சேரும். வீரமிக்க மல்யுத்த வீரனாக சண்டைக் காட்சிகளில் சீறிப் பாய்கிறார். அப்பாவித்தனமான பாவனைகள், ஆங்கிலம் கற்கும் முயற்சிகளில் ஆர்யாவிடம் நிறைய முன்னேற்றம். அதே நேரம் உணர்ச்சிகளைக் கொட்ட வேண்டிய காட்சிகளில் வலுவாக வெளிப்படத் தவறுகிறார். ரயில் நிலையத்தில் காதலியைத் தவற விட்டுப் பரிதவிப்பது, அப்போது அங்கே தட்டுப்படும் காதலியின் முகத்தைக் கண்டு பரவசம் கொள்வது என்று ஒரே சமயத்தில் வெவ்வேறு ரசங்களைக் காட்ட வேண்டிய சவாலான காட்சியில், தனது நடிப்பு ஆர்வத்துக்கு இன்னும் தீனியைப் போட்டிருக்க முடியும்.
மொழிபெயர்ப்பாளராக வரும் ஹனீபா, தன் வித்தியாசமான மேனரிசங்களாலும் மொழிபெயர்ப்புச் சொதப்பல்களாலும் கலகலப்பூட்டுகிறார். போட்டோ எடுக்கும் போதெல்லாம் விறைப்பாக நிற்கும் காட்சிகளின்போது தியேட்டரில் சிரிப்பலைகள்.
நாசருக்கு கம்பீரமான தோற்றம், மிடுக்கான நடிப்பு. எமியை நிச்சயம் செய்துகொள்ளும் ஆங்கிலேய அதிகாரி அலெக்ஸ் கலக்கியிருக்கிறார். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அதிகார வர்க்கத்தின் இரக்கமற்ற முகத்தின் கச்சிதமான அடையாளமாகத் திரையில் வலம் வருகிறார்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் வாம்மா துரையம்மா, பூக்கள் பூக்கும் ஆகிய இரு பாடல்கள் கேட்க நன்றாக இருக்கின்றன. சுதந்திர தின இரவின் பரபரப்பான காட்சிகளில் பின்னணி இசை அபாரம். இப்படம், ஜி.வி. பிராகஷின் பின்னணி இசைக்கு மைல்கல். நேர்த்தியாகத் தன் பங்கை செய்திருக்கிறார்.
நிரவ் ஷா படத்தின் இன்னொரு ஹீரோ. ஒளிப்பதிவில் கால மாற்றங்களை காட்சிப்படுத்தும் விதம் அத்தனை அழகு. மதராசப்பட்டினட்தை அழகிய ஓவியமாக நம் கண் முன் நிறுத்துகிறார். நீராவ் ஷாவின் கேமாரவுக்குக் தன் கலை ஆக்கத்தால் மதராஸ பட்டினத்தை உயிர்ப்பித்துத் தந்திருக்கிறார் கலை இயக்குநர் செல்வ குமார். கலை இயக்குனர்களுக்கு பேர் சொல்லும்படியான படங்கள் அமைவது அபூர்வம். அது செல்வ குமாருக்குக் கிடைத்திருக்கிறது. தன் மொத்தத் திறமையும் கொட்டி கருப்பு வெள்ளை சென்னையைச் செதுக்கியிருக்கும் கலை இயக்குனருக்கு ஒரு பூங்கொத்துக் கொடுக்கலாம். ஆண்டனியின் எடிட்டிங் படத்தின் பரபரப்பைக் கூட்டுகிறது.
வழக்கமான காதல் கதைதான் என்றாலும் அதைச் சொன்ன வித்த்திலும் பின்னணியிலும் படமாக உருவாக்கிய வித்ததிலும் பார்க்கத்தக்க படமாக்கியிருக்கிறார் விஜய். திரையின் ஒவ்வொரு பிரேமிலும் உழைப்புத் தெரிகிறது. எமியின் நடிப்பும் செல்வகுமாரின் கலையாக்கமும் ஷாவின் ஒளிப்பதிவும் சேர்ந்து படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.

இத்தகைய புதிய முயற்சிகளை அங்கீகரிக்கிற தயாரிப்பாளருக்கு வாழ்த்துகள்.
மதராஸப்பட்டினம் – தமிழ் டைட்டானிக்.

0 comments:

Post a Comment