Adsense

Monday, July 19, 2010

ஆனந்தபுரத்து வீடு, அதிர வைக்கும் வீடு...


நடிப்பு: நந்தா, சாயா சிங், கலைராணி, மேகவர்ணபந்த்

இசை: ரமேஷ்கிருஷ்ணா

ஒளிப்பதிவு: அருண்மணி பழனி

திரைக்கதை - வசனம்: சரத் ஹரிதாசன், இந்திரா சௌந்தர்ராஜன், நாகா

தயாரிப்பு: ஷங்கர்

கதை - இயக்கம்: நாகா

சின்னத்திரையில் மர்ம தேசங்களைக் காட்டித் திகிலூட்டிய நாகாவும் இந்திரா சௌந்தரராஜனும் இணைந்து உருவாக்கியுள்ள படம் ஆனந்தபுரத்து வீடு. ஆவிகளின் குடியிருப்பாக மிரட்டும் வீடு அதே ஆவிகளால் ஆனந்தபுரமாக மாறுவதே கதை.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊரான ஆனந்தபுரத்தில் உள்ள வீட்டிற்கு மனைவி ரேவதி (சாயா சிங்), மகன் ஆனந்துடன் (ஆர்யன்) வருகிறான் பாலா (நந்தா). ஆனந்த், ரேவதி, பாலா என ஒவ்வொருவரும் படிப்படியாக அந்த வீட்டில் ஆவி இருப்பதை உணருகிறார்கள். ஆவிகள் உலாவும் வீட்டில் நான் இருக்க மாட்டேன் என்று வெளியேற முனைகிறாள் ரேவதி. அப்போதுதான் அவளுக்கு ஒரு உண்மை தெரிகிறது. விடுமுறையை ஜாலியாக கழிக்க அவர்கள் இங்கே வரவில்லை. பெரும் கடன் பிரச்சனையில் (50 லட்சம்) இருந்து தப்பிப்பதற்காக பாலா இங்கே வந்திருக்கிறான் என்பது தெரியவருகிறது. கடன் கொடுத்த சசிகாந்த் அவர்களை வீட்டுக் காவலில் வைத்துவிடுகிறான். விபத்தில் இறந்துபோன பெற்றோர்தான் இந்த ஆவிகள் என்பதை பாலாவும் ரேவதியும் உணர்கிறார்கள். கடன் பிரச்னையில் இருந்தும் ஆவிகளிடமிருந்தும் எப்படி மீள்கிறார்கள் என்பது கதை.

எந்த சஸ்பென்ஸும் வைக்காமல் பேய் இருக்கிறது என்று முதலிலேயே தெளிவாகக் காட்டிவிடுகிறார் இயக்குநர் நாகா. கதவு தானாகச் சாத்திக்கொள்வது, நாற்காலி தானாகவே ஆடுவது, சொம்பு காற்றில் மிதந்து வருவது, அரூபக் கைகள் சமைப்பது என்று எல்லாமே ஆவியின் வேலை என்பதில் எந்த மர்மமும் இல்லை. இந்த ஆவிகளுக்கு என்ன வேண்டும்? மனிதர்கள் ஆவிகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்? இதுதான் கதையின் பிரச்சினை. கடன் தொல்லை, வீட்டுக் காவல், நண்பனின் துரோகம் எல்லாம் சேர்ந்துகொள்ள, பிரச்சினை பெரிதாகிறது. இவர்களை  மீட்பதில் ஆவிகளின் பங்கு என்ன என்பதை ஓரளவு சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார் நாகா. ஆவிகள் வருவதற்கான காரணத்தைச் சொல்வதில் லாஜிக்கைக் காட்ட மெனக்கெட்டிருக்கிறார். சத்தம், இருட்டு ஆகியவற்றின் துணையுடன் ஆவிகளை வைத்து பயமுறுத்தாமல் ஆவிகளின் செயல்களை ரசிக்கவைப்பது ஆவிக் கதையில் புதுமைதான். ஆனால் இதுவே திரும்பத் திரும்ப வரும்போது  சலிப்பு வருகிறது.  ஆனாலும் கண்ணுக்குத் தெரியாத ஆவிகளையும் கதாபாத்திரங்களாக உணரவைத்திருப்பதில் வெற்றி காண்கிறார் நாகா.

முதலில் கூலான ஆளாகவும் பிறகு கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் பிசினஸ்மேனாகவும் வரும் நந்தா, இயல்பாக நடிக்கிறார். உணர்ச்சிகளை அழுத்தமாகக் காட்ட வேண்டிய சமயங்களில் மூட் அவுட் ஆனவர்போல் இருக்கிறார். ஆனால் பயந்து நடுங்கும் கிளைமாக்ஸ் காட்சியில் அசத்துகிறார். சாயாசிங் அழகாக இருக்கிறார். கிளாஸ்ட்ரோஃபோபியோ (மூடுண்ட இடத்தில் இருக்கும்போது ஏற்படும் பயம்) கொண்ட பெண்ணாக நன்றாகச் செய்திருக்கிறார். ஆவிகளைக் கண்டு அஞ்சுவதும் பிறகு ஆசுவாசம் அடைவதுமான மாற்றங்களை நம்பும்படி சித்தரிக்கிறார். ஆனந்தாக வரும் மாஸ்டர் ஆர்யன், வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறான். கண்ணுக்குத் தெரியாத ஆவிகளும் பேசாத இந்தப் பையனும் படத்தை நகர்த்திச் செல்வதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள். சசிகாந்தாக வரும் குண்டு மனிதர் மேகவர்ணபந்த் அட்டகாசம்.

திகில் படங்களில் இசையும் ஒளிப்பதிவும் முக்கியமானவை. வழக்கமான பேய்ப் படங்களுக்கான இசை போல அல்லாமல் இயல்பான ஓசைகளின் மூலம் பேய்கLள்  இருப்பதை உணரவைக்க வேண்டிய சவால் இப்படத்தில் உள்ளது. ஒளிப்பதிவிலும் வழக்கமான பேய்ப்படங்களுகான இருட்டு இல்லை. சம்பவங்கள் மூலமே பேய்களின் இருப்பு உணர்த்தப்படுகிறது. இசையமைப்பாளர் ரமேஷ்கிருஷ்ணாவும் ஒளிப்பதிவாளர் அருண்மணி பழனியும் இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டிருக்கிறார்கள். இரண்டு பாடல்களில் சித்திரை வானம் கேட்கும்படி இருக்கிறது.

திரைக்கதை, வசனம் ஆகியவற்றைக் கவனித்திருக்கும் நாகா, இந்திரா சௌந்தர்ராஜன், சரத் ஹரிதாசன் ஆகியோர் வித்தியாசமான ஆவிக் கதையைக் கொடுத்திருக்கிறார்கள். ஆவிகளைக் கண்டு பயந்து நடுங்கும் ரேவதி ஒரு கட்டத்தில் ஆவிகளுடன் நட்பாக உணரும் இடத்தில் பார்வையாளர்களையும் அப்படி உணரவைப்பதில் திரைக்கதைக்கு வெற்றி. ஆனால் சில காட்சிகள் (ஆவிகளின் வேலைகள், வீட்டு புரோக்கரின் விஜயங்கள், கடன் தந்தவர்களின் மிரட்டல்கள்...) திரும்பத் திரும்ப வருவதைத் தவிர்த்திருக்கலாம். ஆவி, வீட்டுக் காவல் என்னும் குறுகிய பாதையில் பயணிக்கும் திரைக்கதையில் வேகம் குறைவு. திருப்பங்களும் குறைவு. காட்சிகளின் நகர்வில் சீரியல் வாடை. இடைவேளைக்குப் பிறகு படம் கொஞ்சம் சூடுபிடிக்கிறது. கிளைமாக்ஸ் யூகிக்கக்கூடியதுதான் என்றாலும் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளது.

ஆனந்தபுரத்து வீடு - ஆவிகளின் அன்பான இல்லம்.

0 comments:

Post a Comment