Adsense

Wednesday, July 14, 2010

மதராசபட்டினம் - விமர்சனம் - தமிழ் சினிமாவின் டைட்டானிக்.

’மதராஸ் கூவம் நதியில் ஒரு டைட்டானிக்’ இந்த மதராசபட்டினம். ஒரு ஆழமான அழகான காதலை இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வகையில் மிகவும் பிரமாண்டமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் விஜய். இவரது முந்தைய படங்களான கிரீடம், பொய் சொல்லப் போறோம் படத்தைக் காட்டிலும் மிகவும் அதிகமான உழைப்பை மதராசபட்டினத்தில் பார்க்க முடிகிறது. ஹாலிவுட்டில் வந்த டைட்டானிக், பாலிவுட்டில் வந்த லகான் இரண்டையும் கலந்து கட்டி மீண்டும் ஒரு புது உணர்வை கொடுத்திருக்கிறார்கள்.

1947 -ல் நடக்கிற காதல் கதை. ஆகஸ்டு 15, மணி 12-க்கு வாண வேடிக்கை நடக்க, இந்தியாவின் முதல் சுதந்திரக் கொடி வானில் பறந்துகொண்டிருக்கும் அதே நேரம் உதிரம் சொட்ட சொட்ட வாழ்வா சாவா என்ற நிலையில் உணர்வுகளோடு ஊசலாடிக் கொண்டிருக்கிறது ஒரு காதல். லண்டன் அழகிக்கும் மதராஸ் வீரனுக்குமான காதல்...

லண்டன் நகரில் இருந்து தன் பேத்தியுடன் சென்னை வருகிறார் 80 வயது கடந்த மூதாட்டி ஏமி ஜாக்சன். அவர் ஏன் சென்னை வருகிறார் என்பதற்கான காரணம் ப்ளாஷ் பேக்கில் 1947 மதராசபட்டினமாய் கண்முன் விரிகிறது.

வெள்ளையர்கள் ஆட்சியில் இருக்க, மதராசபட்டினத்தின் கவர்னரின் மகளான ஏமி ஜாக்சன் மதராஸ் வருகிறார். சலவை தொழிலாளியாக இளம்பரிதி (ஆர்யா). குஸ்தி சண்டையில் வல்லவர். இவருக்கு குஸ்தி பயிற்சியாளராக ஐயாக்கண்ணு (நாசர்). இளைஞர்களுக்கு குஸ்தி கற்றுத்தரும் ஐயாக்கண்ணு சுபாஷ் சந்திர போஸை தன் தலைவராக ஏற்றுக்கொண்டவர்.

ஏமிக்கு மதராஸ் மக்களும் அவர்களின் வெள்ளந்தியான வாழ்க்கை முறை எல்லாம் பிடித்துவிடுகிறது. வெள்ளையர்கள் இவர்களை அடிமைப்படுத்தி கொடுமை செய்கிறார்கள் என்பதையும் உணர்கிறார். மதராஸ் மக்கள் மீது பாசம் வர தன் இனமான வெள்ளையர்கள் மீது வெறுப்பும் வருகிறது.

வெள்ளையர்களை நேருக்கு நேர் எதிர்க்கிற இளம்பரிதி மேல் காதலும் மலர்கிறது. கவர்னரான தன் தந்தையின் இன்னொரு மனைவி ஏமியின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். ஏமியால் வெறுக்கப்படும் வெள்ளைக்கார போலீஸ்காரருக்கும் ( அலெக்ஸ்) ஏமிக்கும் விருப்பம் இல்லாமல் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

ஏமி மதராஸ் மக்களோடு அன்போடு பழகும் விதம் அலெக்ஸுக்கு தெரியவர, வெள்ளைக்காரனுக்கு மக்கள் மேல் இருந்த பகை இன்னும் தீவிரமாய் அதிகரிக்கிறது. இளம்பரிதியும் அலெக்ஸும் அவ்வப்போது உரசிக் கொள்கிறார்கள். ஒத்தைக்கு ஒத்தையா சண்டைவர இளம்பரிதி வெற்றியடைகிறான். இதனால் கொல்ஃப் மைதானம் கட்டுவதற்காக பிடித்து வைத்த இடத்தை மீண்டும் சலவைக்காரர்களிடமே கொடுத்துவிடுகிறது வெள்ளைக்கார அரசு.

இதற்கிடையில் ஆகஸ்டு 15 இந்தியாவிற்கு சுதந்திரம் என அறிவிக்கப்பட ஊரே கொண்டாடுகிறது. ஆட்சியை உங்கள் கையில் கொடுத்ததும் அடுத்த ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க மாட்டோம் என உறுதியளிக்கிறான் வெள்ளையன். இளம்பரிதியும் ஏமியும் சோகத்தில் மூழ்கி விடுகிறார்கள்.

இவர்கள் காதல் அனைவருக்கும் தெரியவர, எதற்கும் கவலைப்பட வேண்டாம் என சொல்லி, மறைந்து போன தன் தாயின் தாலியை ஏமியிடம் கொடுத்து, நம்மை யாரும் பிரிக்க முடியாது என உறுதியளிக்கிறார் இளம்பரிதி. பல போராட்டங்களை கடந்து விதியாலும் சதியாலும் பிரிக்கப்படுகிறார்கள்.

இப்போது இளம்பரிதி கொடுத்த தாலியோடு வரும் மூதாட்டி ஏமி, அவரை எப்படி கண்டுபிடிக்கிறார், அவர்களுக்குள் நடந்தது என்ன? இளம்பரிதி எந்த நிலையில் அவரை சந்தித்தார் என்பதை உருக்கமான உணர்வோடு சொல்லியிருகிறார் இயக்குனர்.

காட்சிகளைப் பொருத்த அளவில் எதிலும் மிகை இல்லாமல் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. மக்களை வெள்ளைக்காரன் தப்பிக்கவிட்டு சுட்டுக்கொல்லும் காட்சி பகீர். அதுவும் ஆர்யாவை ஓட விடுவது விறுவிறுப்பு. குஸ்தி சண்டையில் வெள்ளையனை வெளுத்துக் கட்டுகிறார் ஆர்யா. நான் கடவுள் ஆர்யாவுக்கு இதென்ன பெரிய விஷயமா.

கதாநாயகி ஏமி. அளவான அழகு நிறைவான நடிப்பு. அதுவும் தமிழ் வசனங்கள் பேசியிருப்பது சபாஷ். படத்தில் வரும் ஆங்கிலம் கூட அனைவரும் புரியும் வண்ணம் எளிமையாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

முதல் பாதியில் நன்றாகவே சிரிக்க வைக்கிறார் ஹனீஃபா. அதுவும் ஆர்யாவும் அவர் நண்பர்களும் கோட்டு சூட்டு போட்டு வெள்ளைக்கார மாளிகையில் பார்ட்டி டான்ஸ் ஆடுவது பயங்கர சிரிப்பு. ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் வாத்தியாரும் சிரிக்க வைத்திருக்கிறார். தமிழில் அ, ஆ, இ, ஈ இருப்பது மாதிரி இங்கிலீஷில் எ, ஏ, பி, பீ இருக்கும் தானே என ஆர்யா கேட்பது செம லொள்ளு! பாலா சிங், எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் கொடுக்கப்பட்ட காட்சிகளில் நிறைவாக நடித்து நெகிழ வைக்கிறார்கள்.

ஆர்யா சலவைக்காரர் என்பதால் ஏமி சலவைக்கு போடும் தன் அழுக்கு துணிகளில் காதல் சங்கதியை எழுதி அனுப்புவது பாரதிராஜா டச். நாட்கள் நகர ஆர்யா ஆங்கிலம் பேசுவதும் ஏமி தமிழ் பேசுவதும் ஆட்டோகிராஃப் ஞாபகம் வருதே... ஆர்யாவின் லங்கோடு, கடுக்கன் பார்க்கும்போது லகான் அமிர்கான் நினைவில் வந்து போகிறார்.

ஜி.வி.பிரகாஷ் தன் இசையை ரொம்பவும் பொருத்தமாகவே பயன்படுத்தியிருக்கிறார். பாடல்களும் பொருத்தம். மதராசபட்டினம் பொருத்த வரை ரியல் ஹீரோ ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா. மவுண்ட் ரோடு, சென்ட்ரல் ஸ்டேஷன், கூவம் நதி என 1947 மதராஸை ரியலா கண்முன் செதுக்கியிருக்கிறார் கலை இயக்குனர் செல்வ குமார். இவர்கள் இருவரில் ஒருவர் இல்லை என்றாலும் மதராசபட்டினம் மங்கிப்போயிருக்கும்.

இதுபோன்ற வித்யாசமான படைப்புகளை உருவாக்க தமிழ் திரைக்கு கிடைத்திருக்கும் வரம் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி ப்ரதர்ஸ்.

இயக்குனர் விஜய், பிரியதர்ஷனின் சிஷ்யன் என்பதை முதல் முறை நிரூபித்திருக்கிறார். சமீபத்திய நல்ல படங்களின் வரிசையில் மதராசபட்டினம் இடம்பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை சஸ்பென்ஸை தக்க வைத்திருப்பது இயக்குனரின் திறமை.

மதராசபட்டினம் - தமிழ் சினிமாவின் டைட்டானிக்.

1 comments:

Anonymous said...

VERY SUPER

Post a Comment